22 December 2014

கெட்ட கனவு

நிமிர்ந்து மட்டுமே பார்க்கலாம்!
தற்கால வசதியில் அவ்வளவு பெரிய வீடு!
நாலைந்து அறைகள் இருக்கும்!
மொசைக்கல்லில் தரைகள் இருக்கும்!
வந்துபோக வாகனம் இருக்கும்!
கட்டில் இருக்கும்! கட்டில்
மேல் மெத்தை இருக்கும்!
............
இரவில், கடும் குளிரில், மேம்பாலத்தின் கீழ்
நடுங்கிக்கொண்டு, உறங்கிக் கொண்டிருக்கும்
ஒருவனின் கனவு நன்றாகத் தொட‌ர்கிறது தினந்தினம்!

4 December 2014

கவிதையும் வாய்ப்பும்

"வாய்ப்புகள் தேடி வராது. நாம தான்
தேடிப் போகணும்" சற்று எளிதாகப் பலர்
உரைக்கும் வரிகள். மன்னிக்கவும்.
'பெரியாள்' சொன்னால் அது வசனம்.
"சார் நா கவிதை எழுதுவன் சார்"
அடிக்கடி நிராகரிக்கப்பட்ட என் வசனம்.
நான் இன்னும் வளராத கவிஞன்.
ஆதலால், நான் சொல்வது வரிகள்.
"அவரப் பாத்தா ச்சான்ஸ் கெடச்சிடும்" என
ஒருவரைப் பார்க்கச்சென்றால் நாமும் நிராகரிக்கபட்ட
கவிதையாவது எளிமினேஷன் சுற்று.
குவாளிபிகேஷன் சுற்றுக்கு என்ன தகுதி வேண்டும்?
பணம், பதவி, பெரும்புகழ் இதில் ஒன்றைப் பெற்றவரின் பல‌ம்.
அதற்கு எதற்கு திறமை? எல்லாம் வெறுமை.
வீட்டில் வைத்து நாம் ம‌ட்டும் அழகு பார்க்கலாம்.
வெளியில் கொண்டு சென்றால், "இதுல என்ன இருக்கு?"
உலகம் ஏளனக் கவிதை பாடும்.
அதோடு நிறுத்திவிடத்தோன்றும் வாய்ப்பு
கேட்பதையும் கவிதை எழுதுவதையும்.

2 December 2014

அண்ணனும் தங்கையும்


மிளகுக்குப் பதிலாக பப்பாளி விதையைக்
கலப்பது, தங்கை. அவள் பெயர் கலப்படம்.
பழைய மாத்திரையைப் புதிதாக்கி விற்கும்
அவள் அண்ணனின் பெயர் ஊழல்.
உலகை ஆட்டிப்படைக்க உழைத்துவரும்
இருவரும் திறமையாளர்கள்.
விஞ்ஞானம் தொடங்கி வெவ்வேறு துறைகளில்
பதிக்கப்படுகிறது இவர்களின் பாதச்சுவடுகள்.
வேகத்தில் முதலிடம் ஒளிக்கு.
இரண்டாமிடத்தில் இவர்கள்.
பணக்காரர்களுக்குப் பணம்தரும்
பங்குச்சந்தைகள் இவர்கள்.
பிழைக்க வேண்டுவோருக்கு அண்ணனும்
தங்கையும் விருந்தாளி.
உழைக்க வேண்டுவோருக்கோ எதிராளி.

1 December 2014

கிடைக்காத முத்தம்!

அவள் சிரித்தாள்.
அவளின் ஒரு புன்னகைக்கே நான் மயங்கிவிட்டேன்.
உடனே அவளை முத்தமிட்டேன்; கொஞ்சினேன்; முத்தம் அளிக்குமாறு கெஞ்சினேன்.
ஆனால் அவளோ முத்தம் கொடுக்கவில்லை.
முகம் முழுதும் முத்தம் கொடுத்தேன். அவள் கத்தினாள்.
உடனே அவள் தாய், "குழந்த அழுவுதுல்ல விட்ரா பாவம்"
என்று வாங்கிக்கொண்டாள்.

29 November 2014

பெண்ணின் தினம்!

அந்த‌ தருணம் வந்தது‍‍..
என் பெற்றோர் எனக்குத் தந்தது.
அந்த தருணம் எந்த‌ தருணம்?
இந்த தருணம்.
என்னைப் பெற்றவளுக்கு வலி கொடுத்த தினம்.
அந்த வலியை நான் சுமக்கவும்,
என்னை எப்படி வளர்த்தனரோ
என் மக்களை அப்படி வளர்க்கவும்
நினைவு படுத்தும் தினம்.
குடும்பத்தை சுமக்க என் தந்தை
சொல்லாமல் சொன்ன தினம்..
அடடா! என்ன தினம். என்னே தினம்.. என் தனம்.
நான் பிறந்த தினம். 

-பெற்றோருக்காகப் பெண்.

4 November 2014

மரங்கள் சொல்லுகின்றன‌

மனிதன் மரங்களை
வெட்டுகிறான்.
அதனால்,
அழுதுகொண்டே
மரங்கள் சொல்கின்றன,
"எங்கள் இனத்தை அழிக்கிறாய், 

அதன்மூலம் உங்கள் இனம் அழிய வழிவகுக்கிறாய்.
காற்றை வரத் தடுக்கிறாய்.
கள்வா! உனக்கே நீ அழிவைத் தொடுக்கிறாய்!
எங்களை வளர்த்தால்
நீஙகள் வாழலாம்! இல்லையேல், 

சீக்கிரத்தில் அடியோடு வீழலாம்! "

                       
            -சு.க.மணிவேல்.